படைப்பாளி

நான் நரேன் …

இன்றோடு என் டீன் முடிஞ்சு மூணு வருஷம் ஆகுது. என்கூட கல்லூரில சேர்ந்தவங்கலாம் லகரங்கள் சம்பாதிக்க நான் மட்டும் இன்னும் திக்குத்தெரியா காட்டுல தொலஞ்சி பொய் நின்னுட்டு இருக்கேன். ஆம் என் பெற்றோர் கிட்ட கேட்டிருந்தால் என்னை இப்படித்தான் அறிமுகம் செஞ்சிருப்பாங்க. ஆனால் நான் எங்குமே நிக்கல ஓடிட்டே இருக்கேன் என்னோட டெஸ்டினேஷன் நோக்கி. ஆகச் சிறந்த பொறியியல் கல்லூரியில கிடைச்ச கணினி அறிவியல் படிப்பை ஒரு வருஷத்துக்கு மேல என்னால படிக்க முடியலை. கலையை நேசிக்கிற எனக்கு கணினி கோட்பாடுகள் மேல ஈர்ப்பு வரலை. ஒரு தரமில்லாத பொறியாளராய் வருவதை விட ஒரு உயிரோட்டமுள்ள கலைஞனாய் வாழ விரும்புறேன். பெற்றோர் எதிர்ப்புக்கு இடையே படிப்பை பாதியில் நிறுத்திட்டு ஒரு பத்திரிகையில் எழுத்தாளராய் என்னை இணைத்துக்கொண்டேன்.

இந்த இலக்கிய உலகில் என் திறமைகளை நங்கூரமிட்டு நிலைநிறுத்த ஒரு நாவாய் (நாவல்) தேவைப்படுகிறது. அதற்கேற்றாற் போல் தினமும் ரயில் பயணம். நித்தமும் கவலைகளோடு பயணிக்கும் மக்கள் இவர்களிடையே ஆன்மாவை அசைத்துப்பார்க்கும் ஓர் கதைக்கருவை தேடிடும் படைப்பாளி என நான்.

creator அன்றும் நகரின் மற்றொரு கோடியில் இருக்கும் பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அது ஓர் முதல் வகுப்பு பயணப்பெட்டி. சுகமான அந்த பயணத்தில் என்னையும் மறந்து இயற்கையில் லயித்திருந்தேன். பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருந்த அப்பெட்டியில் திடீரென சலசலப்பு. அதுவரை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் படித்து முடித்திருந்த பேப்பருக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டார்கள். சிலர் வராத செல்போன் கால்களை பேசிவிடும் முனைப்பில் இருந்தனர். இயற்கையில் நிலைக்குத்தியிருந்த என் பார்வையை மீட்டு பெட்டிக்குள் சுழல விட்டேன். அப்போது அவர் பெட்டியில் ஏறியதுதான் அந்த நொடி சலசலப்புக்கு காரணம் என தெரிந்தது.

அவர் , என் எதிரே அமர்ந்திருந்த தொப்பை மனிதரிடம்,

‘சார் கொஞ்சம்’ என ஆரம்பிப்பதற்குள்,

‘காசெல்லாம் இல்ல..போம்மா’ என இதற்கெனவே காத்திருந்தவர் போல படக்கென கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.

ஆம், உங்கள் யூகம் சரியே அம்மனிதர் உமிழ்ந்த அத்தகைய வார்த்தைகளுக்கு காரணம் அப்பெண் ஒரு திருநங்கை என்பது தான்!

‘ஏன் சார் நாங்க பிச்சை எடுக்க மட்டும் தான் ரயிலில் ஏறணுமா? எங்க சமூகம் முன்னேறவே கூடாதா? சொந்த பெற்றோரே ஒதுக்கி வெச்சாலும் இந்த விதியை மீறி எங்களால் படிச்சி நல்ல நிலைமைக்கு வர முடியாதா ?’


‘முடியும் சார்…நாங்க முன்னேற ஆரம்பிச்சுட்டோம். மாறவேண்டியது நாங்க மட்டும் இல்ல நீங்களும் உங்க சிந்தனைகளும் தான்’

என அவர் அந்த தொப்பை மனிதரின் அருகிலிருந்த காலி சீட்டை சுட்டிக்காட்டினார் ….

‘நெவெர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்’

என அவர் பேசிக்கொண்டிருக்க அம்மனிதருக்கு தான் செய்த தவறு உறைத்துவிட்டது போலும் ,
‘சாரி மேடம்’ என்றார்.
அவர் வார்த்தைகளை வெற்றுப்புன்னகையோடு ஏற்றுக்கொண்டவர் தனது ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார். நமது அலட்சியமும் நிராகரிப்பும் அவர்கள் புண்பட்ட மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் காயத்தின் அளவு அளவிட முடியாதது. ஆயிரம் வலிகளையும் கேலிகளையும் கடந்து வந்திருந்த அவரது முட்பாதை என் கண் முன்னே விரிந்ததை தவிர்க்க முடியவில்லை. ரயில் நகரத் தொடங்கிவிட்டாலும் என் பயணம் முடிவுக்கு வந்ததாகவே உணர்ந்தேன்..

‘சிலையில் குற்றம் இருப்பின் அது சிற்பியின் தவறே அன்றி சிற்பத்தின் தவறல்லவே..’

எவ்வளவு பெரிய உண்மையை நொடியில் புரியவைத்து விட்டார். கடவுள் படைத்த அனைத்தும் சமமெனில் அவர்களும் அவர் படைப்பின் ஓர் அங்கம் தானே. அவர்கள் உடலிலே ஊனத்தை படைத்த இறைவன் நம் உள்ளத்திலே ஊனத்தை படைத்தது விட்டான். அப்பெண் சாடியது அந்த தொப்பை மனிதரை மட்டும் அல்ல..அவர் தனிமனிதரல்ல நம் சமுதாய பிம்பத்தின் பிரதிபலிப்பு தான் …..

மாற்றம் தனி மனிதருக்குள் ஏற்பட வேண்டும் அது சமுதாயத்தில் எதிரொலிக்க வேண்டும்..
என் தேடல் இப்பயணத்தில் நிறைவடைந்தது …

இதோ என்னுள் மாற்றம் என்னும் உண்மை மானுடத்தை விதைத்த அவரை என் மானசீக குருவாய் ஏற்று என் படைப்புக்கான முன்னுரையை எழுதத் துவங்குகிறேன் ,

படைப்பாளி

—-இவன் மாற்றத்தை நோக்கி …