அனிதாவுக்கு மடல்

அன்பு தங்கை அனிதாவுக்கு,

சொர்க்கத்தில்(லாவது) நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். உலகம் என்னும் நீதிமன்றத்தில் மறுவாய்ப்பு வழங்கப்படாத ஒரே வழக்கு வாழ்க்கை தான். வாழ்க்கை என்னும் நாடக மேடையில் ஜெயிக்க இயலாமல் தூக்கு மேடையை (கயிற்றை) முத்தமிட்ட என் சகோதரியே… நீ சற்று பொறுத்திருந்தால் உன் முடிவை தவிர்த்திருந்தால்.. உன் கனவுக்கு மறுவாய்ப்பு வழங்கியிருந்தால்… இன்று போஸ்டர்களில் மட்டுமே Dr.Anitha வாக வழங்கப்படும் நீ, நேரிலும் மருத்துவராய் வாழ்ந்திருப்பாய். உன் பெற்றவர் நெஞ்சத்தை நிறைத்திருப்பாய்.

ஏனெனில், மதிப்பெண் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட கல்வி முறையில் பயின்றது உன் தவறில்லையே. உள்ள உறுதியை விதைக்க தவறிய சமூகத்தில் வளர்ந்தது உன் தவறில்லையே.. உன் மரணம் எழுப்பி இருக்க வேண்டியது ‘கல்விமுறையில் மாற்றம்‘ என்னும் சுனாமி பேரைலையை.. அனால் அது நீட்டுக்கு எதிரான சிறு அலையாய் மாறியது அரசியல் கட்சிகளுக்கும் சாதிய அமைப்புகளுக்கும் சாதகமாய் அமைந்துவிட்டது. உன் படத்தை வைத்து கட்சியில் ஆள் சேர்க்க கூட்டம் கூட்டியதாலோ என்னவோ மக்களுக்கு அவர்களின் உள்நோக்கம் தெரியாமல் போனது. ஆண்டவர் நடத்திய ஷோ வின் சுவாரஸ்யத்தில் உன்னையும் அல்லவே மறந்தார்கள்… ஏனெனில் எம் மக்களின் தேசிய நோய் ‘மறதி’. எம் அரசியல் தலைவர்களுக்கும் அஃது நன்கு தெரியும்… இல்லையேல் ஊழலில் ஊறியவர்களை மீண்டும் மீணடும் ஆட்சி கட்டிலிலே அமர்த்தியிருப்போமா ???

எம் மக்கள் மறப்பார்கள்… அவர்கள் சுவாதியையும், சங்கரையும் மறந்தவர்கள் அல்லவா.. விவசாயிகளின் கூவலையும் மறந்தவர்கள் தானே!!.
இந்நிலை மாற வேண்டும்..

நூறு இளைஞர்களை தாருங்கள் சுதந்திரம் வாங்கி தருகிறேன் என்றார் நேதாஜி..

அவர் வழி நின்று நாட்டையும் இளைய தலைமுறையையும் காக்க வேண்டிய கடமை நம்முடையதன்றோ!!!

போலி அனுதாபங்களுக்கும் சூட்டில் குளிர்காய நினைக்கும் சுயநலக்காரர்களுக்கு நடுவே,

--இன்னொரு சகோதரியை இழக்க விரும்பாத உங்களில் ஒருவராய் நான்..